Wednesday, 11 June 2014

குறளடிகளார் நினைவஞ்சலி

நல்லா  சிரியர்ப்பேர்  நண்பழனி  மாணிக்கம்
தொல்லா  சிரியர்  தொகைநெறியே – எல்லாம்
தமிழாக  வென்று  தவநீடு  வாழ்க
இமிழ்கடல்  மூழும்  இடம்
                     - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

     ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் கூறும் நல்லுலகம், உலகப் பொது மறையாம் திருக்குறளைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் புரந்து வருகின்றது.

     திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல, பின்பற்றி நடப்பதற்கு என்று உரைப்பார் தமிழ்க் கடல் இரா.இளங்குமரன் அவர்கள்.


உலகம் சீர்பட வேண்டுமாயின் வள்ளுவத்தைத் தவிர மருந்து வேறொன்றுமில்லை என உறுதியாக நம்பி, தன் இறுதி மூச்சு உள்ளவரை, வள்ளுவத்தின் பாதையில், தளராமல் பயணித்தவர் குறளடிகளார் புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்கள்.

..................... நல்லாசிரியரெனத்
திகழும் நல்லோய்  திருக்குறளின்
சீர்சால் நெறியில் ஒழுகி அறம்
அகிலம் பரவப் பரப்பிக்குறள்
அடிகளார்என் றூர்பரவ
திகழும் நல்லோய் ...

எனப், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியராலேயே, புகழப்பட்ட மாணவர் ஒருவர் உண்டென்றால், அவர் குறளடிகளார் ஒருவராகத்தான் இருப்பார்.

     குறளடிகளாரை இவ்வாறுப் போற்றிப் புகழ்ந்தவர் யார் தெரியுமா? அவரது ஆசான், தொல்காப்பியப் பேரறிஞர் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்தான்.

     குறளடிகளார் மொ.பழனிமாணிக்கம் அவர்கள் 10.4.1932 இல், தஞ்சையில் உள்ள தென்னங்குடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியில், தனித் தமிழ் பயின்று 1952 இல் வித்துவான் பட்டம் பெற்றவர்.

     பெரும்புலவர் சித்தரக்குடி நா.இராமநாதன், தொல்காப்பியப் பேரறிஞர்களான பாவலர் ச.பாலசுந்தரம், கூகையூர் கு.அடிகளாசிரியர், முதலான பேராசிரியப் பெருமக்களிடம் பயின்ற பெருமைக்கு உரியவர்.

     இன்று உலகறிந்த அறிஞர்களாக விளங்குகின்ற புலவர் அறிவொளி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் கரந்தையில், ஒரே வகுப்பில் பயின்றவர்.

      வள்ளுவனையும், தந்தைப் பெரியாரையும் தம்மிரு கண்னெனப் போற்றியவர் இவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாங்கினை நெஞ்சில் நிறுத்தி, பெரியார் காட்டிய வழியில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மறவர் இவர்.

     புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, காலந்தவறாமை இவை மூன்றும் இவர்தம் மூச்சு உள்ளவரை கடைபிடித்தக் கொள்கைகளாகும்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்தியெட்டு ஆண்டுகள் தமிழாசிரியராய் தகையாயப் பணியாற்றியவர். எப்பள்ளியில் பணியாற்றினாலும், அப்பள்ளியில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி போற்றிப் புரந்தவர்.

     வழிவழி நாவலர், வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி, தித்திக்கும் முத்துக்கள் இவை மூன்றும் குறளடிகளாரின் எழுத்தில் மலர்ந்த நூல்களாகும்.

     ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின், திருக்குறள் பேரவையின் செயலாளராக 32 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றிய தீரர் இவர்.

பழனி  மாணிக்கப்  பைந்தமிழ்  ஆசான்
கழனி  போன்றவன்  களித்தமிழ் மொழிக்கு
மாமழை  போன்றவன்  மாணவப்  பயிர்க்கு
தாமரை  ஒத்தவன்  தனித்தமிழ் மதிக்கு
                                  - பெருஞ்சித்திரனார்

     குறளையே சுவாசித்து, குறளையே போதித்து வாழ்ந்த குறடிகளார் அவர்கள், தனது 73 ஆம் அகவையில், 16.6.2005 அன்று, தனது மண்ணுலக வாழ்வை நிறைவு செய்தார்.


தொண்டருள் தொண்டர், தலைவருள் தலைவர்,
ஆய்வருள் ஆய்வர்
துணிவருள் துணிவர், பணிவருள் பணிவர்,
பன்முக மாண்பர் பழனிமாணிக்கர்
பலர்புகழ் மாணிக்கர்,
காலந்தவறா கடைப்பிடியாகும், கண்டிப்பில் கண்டிப்பும்
ஆகும் கனிவில் கனிவும் ஆகும்
இப்படி ஒருவரைக் காண இயலுமா?
காண வாழ்ந்தாரே, வாழியர் அவர்
                  - தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்

------

நல்லாசிரியர், குறளடிகளார், குறள் நெறிச் சீலர்
புலவர் திரு மொ.பழனி மாணிக்கம் அவர்களின்
9 ஆம் ஆண்டு
நினைவஞ்சலிச் சிறப்புக் கூட்டம்
16.4.2014 திங்கட் கிழமை
தஞ்சை பெசண்ட் அரங்கில்
நடைபெற உள்ளது.

குறளடிகளாரின்
நினைவினைப் போற்றுவோம்
வாருங்கள்     

27 comments:

 1. அன்பின் ஜெயக்குமார் - குறளடிகளார் நினைவஞ்சலி பதிவு அருமை. குறள் படிப்பதற்கு அல்ல - பின் பற்றி நடப்பதற்கு - என்ன ஒரு அறிவுரை - ஆலோசனை, நடக்கலாமே - நடப்போமே ! - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 2. அன்பின் ஜெயக்குமார் - தமிழ்க் கடல் இரா இளங்குமரன், குறளடிகளார் புலவர் மொ பழனி மாணிக்கம், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரான பாவலரேறு ச பாலசுந்தரம், புலவர் அறிவொளி, ஈரோடு தமிழன்பன் என பல தமிழறிஞர்களைப் பற்றி பதிவில் எழுதியமை நன்று. குறளடிகளாரின் ஒன்பதாவது நினைவஞ்சலி சிறப்புக் கூட்டம் தஞ்சையில் நடைபெற முயறசிகள் எடுத்ததும் நல்ல செயல்கள். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 3. 1990 ம் வருடமோ அதற்கும் பின்னோ, தஞ்சையில் பெசன்ட் லாட்ஜ் ல் நடந்த ஒரு கூட்டத்தில் காலம் சென்ற எனது அருமை நண்பர் திரு அரசிறைவன் அவர்களுடன் புலவர் திரு பழனி மாணிக்கம் அவர்களை சந்தித்த நினைவு இன்னும் இருக்கிறது.

  தித்திக்கும் முத்துக்கள் என்னும் புத்தக வெளியீடு விழா அன்று சந்தித்தேன் என நினைக்கிறேன்.

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் சந்திப்பு மிகுந்த மகிழ்வினை அளிக்கின்றது ஐயா
   நன்றி ஐயா

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. குறளடிகளார்களைப் பற்றி பதிவு அருமை...

  ReplyDelete
 6. வள்ளுவர் காட்டிய நன்னெறி தன்னை வாழ்வில் நண்ணுவர்
  எண்ணிய எண்ணம் யாவும் கைவரப்பெற்று இன்பமாய் வாழ்வார்

  ReplyDelete
 7. வள்ளுவத்தின் பாதையில், தளராமல் பயணித்த
  குறளடிகளார் புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்கள பற்றி
  சிறப்பான ஆக்கத்திற்குப் பாராட்டுக்கள்.!

  ReplyDelete
 8. பின் பற்றி நடப்பதற்கு... ஆகா...!

  வாழ்த்துக்கள்...

  இந்த தளத்தையும் இனி தொடர்கிறேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா
   தங்கள் வருகையும் வாழ்த்தும் மகிழ்வினை அளிக்கின்றன

   Delete
 9. அன்புள்ள

  வண்க்கம். உண்மையில் ஒரு தகுதிவாய்ந்த திருக்குறள் இமயத்தைத் தஞ்சை பெற்றெடுத்தது கொடுப்பினைதான். ஐயா அவர்கள் எனக்கு அறிமுகமானது ஒரு சுவாரஸ்யமான கதை.

  1985 களில் அல்லது அதற்குப் பிந்தைய ஆண்டில் என நினைக்கிறேன். மேலவீதி சக்காய நாயக்கன் தெருவில் மாணிக்கம்
  பிரிண்டர்ஸ் இருந்தது. ஐயாதான் அங்கே அமர்ந்திருப்பார். என்னுடைய நண்பர் (இன்றைக்கு மாறாத அன்புடனும் நட்புடனும் இருக்கும் உயர்நட்பாளர்) திருமிகு திருமாவளவன் அவர்கள் அங்கு அச்சகத்தில் மேலாளராக இருந்தார். பணியில் அத்தனை பொறுப்பும் எதனையும் சரியாக காலத்தில் செய்யும் திறமும் வாய்க்கப்பெற்றவர். அரசு அலுவலகம் போலவே முறைப்படியான பதிவேடுகளுடன் அவர் அங்கு பணிபுரிந்தவர்.

  அவரைப் பார்க்கச் சென்ற சந்தர்ப்பத்தில்தான் ஐயா பழனி மாணிக்கனார் அவர்கள் அறிமுகமானார். அன்பொழுகப் பேசுவார். அப்போதுதான் அவர் திருக்குறள் பேரவை வைதது நடத்துவது தெரிந்து நான் உடனே அதில் ஆயுள்கால உறுப்பினர் ஆனேன். எனவே அதற்குப் பின் தொடர்ந்து அழைப்பிதழ் அஞ்சல் அட்டையில் அவர் கையொபப்முடன் வரும். தவிரவும் என்னுடைய பிறந்த நாளுக்கு நினைவில் வைத்து அஞ்சலட்டையில் எழுதி பேரவையில் கௌரவம் செய்ததுண்டு. மனமார வாழ்த்துவார்கள். இரண்டு கூட்டங்களுக்கு மேல் வராவிட்டால் அதற்குப்பின் அழைப்பிதழ் அனுப்பமாட்டார். ஆனால் வரமுடியாத சூழலைக் குறிப்பிட்டுக் கடிதம் எழுதினால் தொடர்ந்து அழைப்பிதழ் வரும். சொற்பக் கூட்டம் என்றாலும் குறித்த நேரத்தில் பேரவை நிகழ்வைத் தொடங்கிவிடுவார். ஒருமுறை எங்கள் பேரவையிலேயே ஆயுள்கால உறுப்பினராக சேர்ந்துள்ள தாங்கள்தான் வயதில் மிக இளையவர் என்று அன்றைக்குச சொல்லி பாராட்டினார். அவரின் பாராட்டு கோடிபெறும்.

  நடுவில் என்னுடைய பணிச்சூழல் காரணமாக தொடர்பு விட்டுப்போயிற்று. தற்போது கடந்த ஓராண்டாக வீரராகவா பள்ளிக்கு செல்கிறேன். ஐயா இப்போது இல்லை. என்றாலும் ஐயாவின் புதல்வர் மரியாதைக்குரிய மாறவர்மன் பொறுப்பேற்று அழகாக பேரவை நிகழ்வுகள் போய்க்கொண்டிருக்கின்றன. ஆங்கில இலக்கிய ம் படித்து ஆங்கிலத்தில் சரளமாக பேசவம இன்றைக்கு ஐயா விட்டுச்சென்ன அச்சகப் பணிகளில் பல்வேறு பதுமைகளையும் மாற்றங்களையும் செய்வதோடு அதற்கிணையாக ஐயா விட்டுச்சென்ற திருக்குறள்
  பேரவை பணிகளையும் தொடரந்து செம்மையாகச் செய்து வருகிறார்.

  காலம் முழுக்க தமிழ் கடமைப்பட்டிருக்கிறத.

  ஐயாவின் புகழ் அந்தக் குறள்களைப்போலவே நின்று
  சிலைத்திருக்கும்.

  இதுகூட தமிழ்த்தொண்டுதான் ஜெயக்குமார். இதுபோன்ற
  பதிவுகள் வரலாற்றின் முக்கியமான நிகழ்வுகள்.

  நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி ஐயா

   Delete
 10. குறள் வழி நடப்பது என்பது கேட்க இனிமையாய் இருக்கிறது நம்மில் நன்கு கற்றறிந்த எத்தனைபேருக்கு எத்தனை குறள்கள் தெரியும் ஆங்காங்கு மேற்கோள் காட்டப்படும் குறள்கள் மட்டுமே நினைவிருக்கலாம் குறளுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்த பழனி மாணிக்கம் அவர்களது நினைவைப் போற்றுவோம் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 11. எனது தாதா போற்றுதலுக்கு உரிய குறளடிகளார் புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்கள் பற்றி அன்பின் ஜெயக்குமார் அவர்கள் பதிவு நினைவு நாளான இன்று (16.06.2014) பார்த்தவுடன் பெருமகிழ்ச்சி அடைய்ந்தேன் மிக்க நன்றி

  ReplyDelete
 12. எனது மாப்பிள்ளை அருண் குமார் மாறவர்மன் தாத்தா புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்களை பற்றிய ஆசிரியர் ஜெயக்குமார் அவர்கள் பதிவு என்னைப் பெரிதும் மகிழ்வித்தது.

  ReplyDelete