Wednesday, 11 June 2014

குறளடிகளார் நினைவஞ்சலி

நல்லா  சிரியர்ப்பேர்  நண்பழனி  மாணிக்கம்
தொல்லா  சிரியர்  தொகைநெறியே – எல்லாம்
தமிழாக  வென்று  தவநீடு  வாழ்க
இமிழ்கடல்  மூழும்  இடம்
                     - மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

     ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ் கூறும் நல்லுலகம், உலகப் பொது மறையாம் திருக்குறளைச் சீராட்டிப் பாராட்டிப் போற்றிப் புரந்து வருகின்றது.

     திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல். திருக்குறள் என்பது படிப்பதற்கல்ல, பின்பற்றி நடப்பதற்கு என்று உரைப்பார் தமிழ்க் கடல் இரா.இளங்குமரன் அவர்கள்.


உலகம் சீர்பட வேண்டுமாயின் வள்ளுவத்தைத் தவிர மருந்து வேறொன்றுமில்லை என உறுதியாக நம்பி, தன் இறுதி மூச்சு உள்ளவரை, வள்ளுவத்தின் பாதையில், தளராமல் பயணித்தவர் குறளடிகளார் புலவர் மொ. பழனி மாணிக்கம் அவர்கள்.

..................... நல்லாசிரியரெனத்
திகழும் நல்லோய்  திருக்குறளின்
சீர்சால் நெறியில் ஒழுகி அறம்
அகிலம் பரவப் பரப்பிக்குறள்
அடிகளார்என் றூர்பரவ
திகழும் நல்லோய் ...

எனப், பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியராலேயே, புகழப்பட்ட மாணவர் ஒருவர் உண்டென்றால், அவர் குறளடிகளார் ஒருவராகத்தான் இருப்பார்.

     குறளடிகளாரை இவ்வாறுப் போற்றிப் புகழ்ந்தவர் யார் தெரியுமா? அவரது ஆசான், தொல்காப்பியப் பேரறிஞர் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள்தான்.

     குறளடிகளார் மொ.பழனிமாணிக்கம் அவர்கள் 10.4.1932 இல், தஞ்சையில் உள்ள தென்னங்குடி என்னும் சிற்றூரில் பிறந்தவர்.

     கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின், உமாமகேசுவர உயர்நிலைப் பள்ளியில் பயின்று, பின்னர் கரந்தைப் புலவர் கல்லூரியில், தனித் தமிழ் பயின்று 1952 இல் வித்துவான் பட்டம் பெற்றவர்.

     பெரும்புலவர் சித்தரக்குடி நா.இராமநாதன், தொல்காப்பியப் பேரறிஞர்களான பாவலர் ச.பாலசுந்தரம், கூகையூர் கு.அடிகளாசிரியர், முதலான பேராசிரியப் பெருமக்களிடம் பயின்ற பெருமைக்கு உரியவர்.

     இன்று உலகறிந்த அறிஞர்களாக விளங்குகின்ற புலவர் அறிவொளி, கவிஞர் ஈரோடு தமிழன்பன் போன்றோருடன் கரந்தையில், ஒரே வகுப்பில் பயின்றவர்.

      வள்ளுவனையும், தந்தைப் பெரியாரையும் தம்மிரு கண்னெனப் போற்றியவர் இவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் வாங்கினை நெஞ்சில் நிறுத்தி, பெரியார் காட்டிய வழியில், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட மறவர் இவர்.

     புலால் மறுத்தல், கள்ளுண்ணாமை, காலந்தவறாமை இவை மூன்றும் இவர்தம் மூச்சு உள்ளவரை கடைபிடித்தக் கொள்கைகளாகும்.

     ஒன்றல்ல, இரண்டல்ல, முப்பத்தியெட்டு ஆண்டுகள் தமிழாசிரியராய் தகையாயப் பணியாற்றியவர். எப்பள்ளியில் பணியாற்றினாலும், அப்பள்ளியில் திருவள்ளுவர் கழகத்தை நிறுவி போற்றிப் புரந்தவர்.

     வழிவழி நாவலர், வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறி, தித்திக்கும் முத்துக்கள் இவை மூன்றும் குறளடிகளாரின் எழுத்தில் மலர்ந்த நூல்களாகும்.

     ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின், திருக்குறள் பேரவையின் செயலாளராக 32 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றிய தீரர் இவர்.

பழனி  மாணிக்கப்  பைந்தமிழ்  ஆசான்
கழனி  போன்றவன்  களித்தமிழ் மொழிக்கு
மாமழை  போன்றவன்  மாணவப்  பயிர்க்கு
தாமரை  ஒத்தவன்  தனித்தமிழ் மதிக்கு
                                  - பெருஞ்சித்திரனார்

     குறளையே சுவாசித்து, குறளையே போதித்து வாழ்ந்த குறடிகளார் அவர்கள், தனது 73 ஆம் அகவையில், 16.6.2005 அன்று, தனது மண்ணுலக வாழ்வை நிறைவு செய்தார்.


தொண்டருள் தொண்டர், தலைவருள் தலைவர்,
ஆய்வருள் ஆய்வர்
துணிவருள் துணிவர், பணிவருள் பணிவர்,
பன்முக மாண்பர் பழனிமாணிக்கர்
பலர்புகழ் மாணிக்கர்,
காலந்தவறா கடைப்பிடியாகும், கண்டிப்பில் கண்டிப்பும்
ஆகும் கனிவில் கனிவும் ஆகும்
இப்படி ஒருவரைக் காண இயலுமா?
காண வாழ்ந்தாரே, வாழியர் அவர்
                  - தமிழ்க் கடல் இரா.இளங்குமரனார்

------

நல்லாசிரியர், குறளடிகளார், குறள் நெறிச் சீலர்
புலவர் திரு மொ.பழனி மாணிக்கம் அவர்களின்
9 ஆம் ஆண்டு
நினைவஞ்சலிச் சிறப்புக் கூட்டம்
16.4.2014 திங்கட் கிழமை
தஞ்சை பெசண்ட் அரங்கில்
நடைபெற உள்ளது.

குறளடிகளாரின்
நினைவினைப் போற்றுவோம்
வாருங்கள்



     

Friday, 7 February 2014

40 ஆம் ஆண்டு விழா

தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவையின் 40 ஆம் ஆண்டு விழா, கடந்த 1.2.2014 சனிக் கிழமை மாலை 5.00 மணிக்கு, தஞ்சாவூர், பெசன்ட அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது.


விழாவிற்கு முன்னதாக,
இசைக் குயில், குறள்நெறிச் செம்மல்,
திருமதி ஜானகி சுப்பிரமணியன் அவர்கள்,
தமிழிசைப் பாடல்களைப் பாடி,
விழாவிற்கு வந்திருந்தோரை தமிழின்பக் கடலில் மிதக்க விட்டார்.


தொடந்து,
திருக்குறள் திரு கூ.மாரிமுத்து அவர்கள்,
திருக்குறள் ஓதினார்.


தமிழிசைச் செல்வி
து.இந்து அவர்கள்
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடினார்.




உலகத்திருக்குறள் பேரவைச் செயலாளர்,
குறளறச் சுடர்
திரு பழ.மாறவர்மன் அவர்கள்
வரவேற்புரையாற்றினார்,

 

குறள்நெறிச் செம்மல்
புலவர் திரு அரங்க. அறமன்னன் அவர்கள்
அறிக்கை வாசித்தார்.




உலகத் திருக்குறள் பேரவையின், மாநிலத் துணைத் தலைவர்
குறள்நெறிச் செல்வர், பாரிவேள்
திரு சி.நா.மீ.உபயதுல்லா அவர்கள்
தலைமையுரையாற்றினார்.

தொடர்ந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது.


     
பண்ணாட்டு ரோட்டரி சங்கம், தமிழ் நாடு ஓமியோபதி குழு, தமிழ் நாடு அரசு காசநோய் ஒழிப்புச் சங்கம், மலேசிய அரசு புற்றுநோய் சங்கம் ஆகிய அமைப்புகளில் உறுப்பினராகப் பணியாற்றி வருபவரும், மருத்துவ ஆராய்ச்சியாக ஒன்பது ஆயுர்வேத மருந்துகளைக் கண்டறிந்து, கட்டுரைகள் வரைந்து, மருத்துவ இதழ்கள் வழியாக, உலகிற்கு வழங்கியவரான,
ஹாஜி எல்.கமால் பாட்சா அவர்களுக்கு,
குறள் நெறிச் செம்மல்
விருது வழங்கப் பெற்றது.


     இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழிலும் வல்லவரும், சிறந்த படைப்பாளியும், இசை நாடகத் துறையில் புகழ் மிக்கவரும், தந்தைப் பெரியாரின் முன்னிலையில் அரங்கேறிய சதிகாரி என்னும் நாடகத்தை எழுதியவரும், 21 நாட்டிய நாடகங்களை, தமிழ் கூறும் நல்லுலகிற்கு வழங்கியவருமான,
கவிமுகில் நீடா நா.கோபாலகிருட்டினன் அவர்களுக்கு
குறள்நெறிச் செல்வர்
விருது வழங்கப் பெற்றது.


     வெற்றித் தமிழர் பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், கரந்தை சத்திய நாராயண சித்தர் ஆசிரமம் மற்றும் கோவை பாலரிஷி ஆசிரமங்களின் அறங்காவலரும், சமூக இலக்கியப் பேரவையின் மாவட்டச் செயலாளராய் பொறுப்பேற்று, ஆண்டுதோறும், சிறந்த கவிஞர்கள், தமிழறிஞர்களுக்கு விருது வழங்கிச் சிறப்பித்தும், இலக்கியக் கூட்டங்கள், ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி நடத்தி வருபவருமான,
திரு இரா.செழியன் அவர்களுக்கு
குறள்நெறிச் செல்வர்
விருது வழங்கப் பெற்றது.






உலகத் திருக்குறள் பேரவையின் மாநிலத் தலைவர்
தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள்,
 சிறப்புரையாற்றி, ஆண்டு விழாவினை ஒட்டி, நடத்தப் பெற்ற பல்வேறு போட்டிகளில், பங்குபெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்குப் பரிசில்களை வழங்கிச் சிறப்பித்தார்.

புலவர் திரு ந.சண்முகம் அவர்கள்
விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.


விழா நிகழ்வுகளை 
புலவர் கோ.பாண்டுரெங்கன் அவர்கள்
தொகுத்து வழங்கினார்


புலவர் திருமதி.சா.மல்லிகா அவர்கள்

நாட்டு வாழ்த்துப் பாட விழா இனிது நிறைவுற்றது.

Saturday, 25 January 2014

உலகத் திருக்குறள் பேரவை அன்புடன் அழைக்கின்றது



நண்பர்களே, வணக்கம். நலம்தானே.

     இன்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன், தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களால், தஞ்சையில், உலகத் திருக்குறள் பேரவை தோற்றுவிக்கப் பெற்றது. இன்று தமிழகம் முழுவதும், கிளைகள் பரப்பி, ஆல் போல் இப்பேரவை தழைத்துப் பரவியுள்ளது.

     தஞ்சாவூர், உலகத் திருக்குறள் பேரவையானது, தொடங்கிய நாள் முதல், இன்று வரை, வாரந்தோறும் கூட்டம், திங்கள் தோறும் கூட்டம், ஆண்டுதோறும் கூட்டம் என, தனது பணியினைச் செவ்வனே, தொய்வின்றிச் செய்து வருகின்றது.

தவத்திரு பொன்னம்பல அடிகளார்,
மாநிலத் தலைவர்.


குறள்நெறிச் செல்வர், பாரிவேள்
திரு சி.நா.மீ.உபயதுல்லா,

மாநிலத் துணைத் தலைவர்

குறள்நெறிச் செல்வர்
திரு செ.ப.அந்தோணிசாமி,
தலைவர்

குறளறச் சுடர்
திரு பழ.மாறவர்மன்,
செயலாளர்.

குறள்நெறிச் செல்வர்
திரு கு.அமல்ராஜ்,
பொருளாளர்.

     நண்பர்களே, சில நாட்களுக்கு முன்னர், மாணிக்கம் அச்சக உரிமையாளரும், தஞ்சாவூர் உலகத் திருக்குறள் பேரவையின் செயலாளருமான குறளறச் சுடர் திரு பழ.மாறவர்மன் அவர்களைச் சந்தித்தேன். அப்பொழுது, உலகத் திருக்குறள் பேரவையின் செயல்பாடுகளை, இவ்வுலகின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும் தமிழர்கள், அறியும் வண்ணம் வலைப் பூ ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்ற தனது விருப்பத்தினைத் தெரிவித்தார்.

     இதோ வலைப் பூ. உலகத் திருக்குறள் பேரவையின் தமிழ் வளர்ச்சிப் பணிகள் பற்றிய செய்திகள், நூல் வெளியீட்டுச் செய்திகள் மற்றும் வாராந்திரக் கூட்டங்கள், திங்கள் கூட்டங்கள் போன்ற அனைத்துச் செய்திகளையும் தாங்கி, இவ்வலைப் பூ வெளி வரும்.

நண்பர்களே,
உங்கள் நல்லாதரவினை வேண்டுகிறோம்.

என்றென்றும் அன்புடன்,
கரந்தை ஜெயக்குமார்





உலகத் திருக்குறள் பேரவையின்
40ஆம் ஆண்டு விழாவிற்கு
வருக வருக
என 
அன்போடு அழைக்கின்றோம்